சக்திமாலை – இருமுடியும், சக்திவிரதமும்: மேல்மருவத்தூர்

சக்திமாலை – இருமுடியும், சக்திவிரதமும்.
*****************************************

“அன்னையை மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி, சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து, மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை வலம் வந்து அன்னையிடம் சரணடைந்தால், நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்””சக்திமாலை அணியும் பொழுது ஒரு நிமிடமாவது தன்னை மறந்து சந்தோசமாக இருக்க வேண்டும்.”

“பிறந்ததிலிருந்து இன்றுவரை கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்.”

“கருவறை முன்பு அபிடேகம் செய்யும் போது அரை நிமிடமாவது மனதை ஒருமுகப் படுத்தினால் கூட இந்த முறை இருமுடி அணிந்த பலனைத் தருகிறேன்.”

– சக்திமாலை குறித்த அன்னையின் அருள்வாக்குகள்.

சக்தி மாலை:

சக்தி மாலையைச் சிறு பிள்ளைகள் உட்பட ஆண், பெண் அனைவரும் வயது வரம்பு இன்றி அணியலாம். சக்திமாலையை அணிந்து பக்தர்கள் தாம் இருக்கும் இடத்திலேயே ஐந்து அல்லது மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டு மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தினை அடைய வேண்டும்.

சக்திமாலை அணிபவர்கள் தங்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திலோ/சக்திபீடத்திலோ அல்லது தாங்கள் சார்ந்துள்ள மன்றத்திலோ/ சக்திபீடத்திலோ தான் மாலை அணிய வேண்டும்.

சக்திமாலை, இருமுடிப் பை, டாலர் அகியவற்றினைச் சித்தர் பீடத்திலிருந்தோ அல்லது சித்தர் பீடத்திலிருந்து வாங்கி வைத்திருக்கும் மன்றங்கள் / சக்திபீடங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

சக்திமாலை அணிந்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது முதலில் “ஓம்சக்தி” என்று சொல்லுதல் வேண்டும்.

சக்திமாலை அணிந்து விரதமிருந்து சித்தர் பீடம் வந்து திரும்பப் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு தடையல்ல.

சக்திமாலை அணிந்திருக்கும் காலங்களில், உறவினர், பங்காளிகள் வீட்டில் அசம்பாவித காரியங்கள் ஏற்படுமானால் தீட்டு எனக்கருதி மாலையை கழற்றத் தேவையில்லை. மாலையுடனேயே மேற்படிக் காரியங்களில் பங்கேற்று தொண்டாற்றலாம்.

மாலை அணிபவர்கள் (பணிக்கு செல்பவர்கள் உட்பட) ஒன்பது முறைகளுக்கு மேல் மாலை அணிபவர்கள் மஞ்சள் நிற உடைகளும் மற்றவர்கள் சிவப்பு நிற உடைகளும் மட்டுமே அணிய வேண்டும்.

சக்தி விரதம்:

விரத நாட்களில் ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டும். ஐம்புலன்களை அடக்கி, மனக்கட்டுப்பாட்டுடன் தீய பழக்கங்களைத் தவிர்த்துத் தங்களுடைய கடமைகளைச் செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்பொழுதும் இருத்தி வழிபடுதல் வேண்டும்.

உறங்கும் போதும் செவ்வடையின் மீதே படுத்து உறங்க வேண்டும். விரத காலங்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளுடனேயே கண்டிப்பாக இருக்க வேண்டும். மிதியடிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

காலை, மாலை இருவேளையும் நீராடி அன்னையை வழிபடுதல் வேண்டும். காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருவுருவப் படத்தின் முன் அம்மாவின் திருமந்திரப் பாடல்களைப் பாடி வழிபடுதல் அவசியம்.

மாலை வேளைகளில் தவறாமல் மாலை அணிந்தவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ அல்லது அம்மன் ஆலயத்திற்கோ சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.

அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம், ஐவர் குழுவாகவோ, மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தமக்குள்ள சேர்ந்து கொண்டு, ஒவ்வொருவர் வீட்டிற்கும், மற்றவர்கள் சென்று அவர்கள் வீட்டிற்கு திருஷ்டி கழித்துவிட்டுக் கூட்டு வழிபாடு செய்துவிட்டு அவர்கள் வீட்டில் அளிக்கும் உணவை உண்ண வேண்டும்.

மேல்மருவத்தூர் புனிதப் பயணம்:

சக்திமாலை அணிந்தவர்கள் மேல்மருவத்தூர் புனிதப் பயணம் துவங்கும் முன் யாரேனும் ஓர் ஏழை வீட்டிற்குச் சென்று செவ்வாடை மீது இருமுடி இறக்கி வைத்து, அவர்களுடன் கூட்டு வழிபாடு நடத்தி தாம் தம்முடைய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உணவைத் தயாரித்தோ அல்லது கொண்டு சென்றோ அவர்களுக்கு முதலில் உணவு அளித்து விட்டு, பின்னர் அங்குச் சென்ற சக்திகள் உணவருந்த வேண்டும். அந்த ஏழை வீட்டிற்கு முடிந்த அளவு ஆடைதானம் செய்வது சிறப்பு.

பயணம் துவங்குபவர்கள் சற்று தூரம் நடந்து வர வேண்டும். தனி வண்டியில் வருபவர்கள் வண்டியில் அன்னையின் திருவுருவப் படத்தினைப் பொருத்தி மாலையிட்டு, ஆராதனை செய்து வண்டியைச் சுற்றி வந்து, எலுமிச்சம் பழம் பிழிந்து ஊர்தியில் ஏற வேண்டும். முடிந்த வரையில் இரவு நேரங்களில் பயணம் தவிர்க்கப்பட வேண்டும். உந்து வண்டியில் வருபவர்களும், சக்திமாலை செலுத்தியபின் வீட்டிற்கு செல்பவர்களும் 50 கி.மீ. வேகத்திற்கு மிகாமல் பயணம் செய்ய வேண்டும்.

இருமுடிப் பையைத் தோளில் அல்லது தலையில் ஆடைக்கேற்ப எடுத்துச் செல்ல வேண்டும். இயற்கைக் கடன்களைக் கழிக்க வேண்டியிருப்பின் இருமுடியை உடன் வரும் மாலை அணிந்தவர்களிடம் தந்து விட்டுச் செல்ல வேண்டும். தரையில் வைக்கும் போது செவ்வாடை பரப்பி அதன் மேல் இருமுடியை வைக்க வேண்டும்.

இருமுடி செலுத்துதல்:

மேல்மருவத்தூர் சித்தர் பீடதிற்குள் வரிசையாக மந்திரங்களை மனதிற்குள் சொல்லிக்கொண்டு மௌனமாக வர வேண்டும். இருமுடி தொண்டில் இருக்கும் தொண்டர்கள் வழிகாட்டுதல் படி நடந்து கொள்ளவேண்டும். கருவறைக்குச் சென்று தனது மாலையை தானே கழற்றி சுயம்பு அன்னைக்கு அபிடேகம் செய்து, அபிடேகத்திற்கு பின் தானே அணிந்து கொள்ள வேண்டும்.

பிறகு தன்னால் முடிந்த தொண்டினைச் செய்து விட்டு தியானம் செய்து, நீராடி அங்கவலம் வருதல் வேண்டும். உடல் நலிவுற்றவர்கள், கருவுற்றுள்ள பெண்கள், மிகவும் வயதானவர்கள் அங்கவலம் வரத் தேவையில்லை.

சித்தர் பீடத்திலிருந்து கிளம்பும் முன் மாலை அணிந்தவர்களுக்கு, குரு சக்தி எலுமிச்சம் பழம், பூசணிக்காய் கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும்.

மாலையைக் கழற்றும் முறை:

சித்தர் பீடத்திலிருந்து வீடு திரும்பும் வரை, சக்திகள் அவரவர்களுக்குரிய மஞ்சள் அல்லது செவ்வடையில் தான் இருக்க வேண்டும். வீடு திரும்பும் போது வேறு எங்கும் செல்லாமல் வீடு திரும்பி அன்னையின் திருவுருவப் படத்தின் மேல் மாலையைக் கழற்றி அணிவித்து விரதத்தினை முடித்துக் கொள்ள வேண்டும்.

சித்தர் பீடத்தில் கொடுக்கப்பட்ட அரிசியுடன் தேவையான அளவு அரிசி கலந்து சர்க்கரை அல்லது வெண் பொங்கல் செய்து தீபாராதனை காண்பித்து, திருஷ்டி கழித்து அனைவரும் உண்ண வேண்டும்.

முக்கிய குறிப்பு:

ஒன்பது முறை சக்தி மாலை அணிந்து இருமுடி அபிடேகம் செய்தி முடித்தவர்கள் பத்தாவது முறை சக்திமாலை அணிவதற்கு முன்பாக, ஒன்பது முறை அணிந்த சக்திமாலையிலிருக்கும் டாலரை தங்கள் வீட்டு முன் வாயிலில் அல்லது பூசையறை வாயிலின் மேல் ஸ்ரீ சக்கரம் தெரியுமாறு பதித்துவிட வேண்டும். ஒன்பது முறை இருமுடி அபிடேகம் முடித்த சக்திமாலை மற்றும் இருமுடிப் பை ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.

பத்தாவது சக்திமாலை அணிய மஞ்சள் இருமுடிப் பை மற்றும் மாலை, டாலர் புதியதாக வாங்கிக் கொள்ளவேண்டும்.

அவ்வாறே பதிமூன்று முறை மாலை அணிந்து இருமுடி அபிடேகம் செய்து முடித்தவர்கள் 14 வது மாலை போடும் முன் 13 மாலை செலுத்திய ஒருவரின் டாலரை தங்கள் வீட்டு முன் வாயிலில் அல்லது பூசையறை வாயிலின் மேல் டாலரில் உள்ள அம்மன், சுயம்பு வெளியே தெரியுமாறு பதித்துவிட வேண்டும். 13 முறை இருமுடி அபிடேகம் முடித்த சக்திமாலை மற்றும் இருமுடிப் பை ஆகியவற்றை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.

14 வது சக்திமாலை அணிய மஞ்சள் இருமுடிப் பை மற்றும் மாலை, டாலர் புதியதாக வாங்கிக் கொள்ளவேண்டும்.

“ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா!”

– ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ, பண்பாட்டு அறநிலை வெளியீடான “சக்தி விரதமும் – சக்தி மாலை அணியும் முறையும்” என்ற நூலிலிருந்து.

இருமுடி பற்றிய அன்னையின் அருள்வாக்கு:

“தொடர்ந்து இருமுடி செலுத்து! ஒன்பது மாலை போதும்! பத்து மாலை போதும்! என்று நிறுத்திக் கொள்ளாதே! நீ செலுத்தும் ஒவ்வொரு இருமுடிக்கும் கட்டாயம் பலன் உண்டு.”

“எங்கெங்கே அதிக அளவில் சக்தி மாலை அணிந்து இங்கு வந்து இருமுடி செலுத்துகிறார்களோ அங்கே அழிவுகள் அதிகம் இருக்காது.”

சக்தி மாலை இருமுடி

• அன்னை அவள் அருள் பெறவே
அவள் அருளிய இருமுடி
• ஆதிபராசக்தியை கண்டிடவே
ஆண்டுக்கொருமுறை இருமுடி
• இன்னல் தீர்க்க இனியவழி
இன்பமாய் சுமப்போம் இருமுடி
• ஈடு இணையற்ற வாழ்வதனை
ஈட்டித் தந்திடும் இருமுடி
• உள்ளக் கழிவை களைந்திடவே
உவந்து அணிவாய் இருமுடி
• ஊழ்வினை செய்வினைகளை
ஊதித்தள்ளிடும் இருமுடி
• எல்லா நலனும் பெற்றிடவே
ஏந்தி வருவோம் இருமுடி
• ஏவல் பில்லி சூனியத்தால்
ஏங்குவோரை காக்கும் இருமுடி
• ஐஸ்வரியம் பல பெறவும்
ஐம்புலனை அடக்கிடவும் இருமுடி
• ஒப்பில்லா வாழ்வு பெற
ஒவ்வொரு ஆண்டும் இருமுடி
• ஓங்காரி உன்னை தேடி
ஓடி வரவே இருமுடி
• ஒளவியம் தீர்த்து எமக்கு
ஒளஷதமாய் வாழ்வளிக்கும் இருமுடி

“ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா!”

– ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ, பண்பாட்டு அறநிலை வெளியீடான “சக்தி விரதமும் – சக்தி மாலை அணியும் முறையும்” என்ற நூலிலிருந்து.

“• அன்னை அவள் அருள் பெறவே அவள் அருளிய இருமுடி • ஆதிபராசக்தியை கண்டிடவே ஆண்டுக்கொருமுறை இருமுடி • இன்னல் தீர்க்க இனியவழி இன்பமாய் சுமப்போம் இருமுடி,”

இருமுடி செலுத்துவது உன்னுடைய அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே! உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, உன் குடும்பத்தில் உள்ள அழுக்கு, இவ்விரண்டு அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே அந்த இருமுடி!
ஒழுக்கம், கட்டுப்பாடு இன்றி நீ செலுத்தும் இருமுடியால் பயனில்லை –அம்மா

“இருமுடி செலுத்தியும் பலன் கிடைக்க வில்லையே என்று நினைக்க கூடாது .எப்போதும் அதற்கு பலன் உண்டு .எவரையும் நான் கைவிடமாட்டேன்”.-அன்னையின் அருள்மொழி

“திசை தெரியாமல் அலையும் இன்றைய மக்களை திசை திருப்பவே இருமுடி செலுத்த வைக்கிறேன் .ஒருமுறை இருமடி செலுத்தினாலாவது திருந்துவானா என்று பார்க்கிறேன்”.-அன்னையின் அருள்மொழி

“திசை தெரியாமல் அலையும் இன்றைய மக்களை திசை திருப்பவே இருமுடி செலுத்த வைக்கிறேன் .ஒருமுறை இருமடி செலுத்தினாலாவது திருந்துவானா என்று பார்க்கிறேன்”.-அன்னையின் அருள்மொழி

“இருமுடி அணிந்தால் உங்களுக்கு எதிரான மாந்தரிகம் அழியும்”.–அன்னையின் அருள்மொழி

“மகனே ! இருமுடி விஷயத்தில் நம்புகிறவன் நம்பட்டும் .நம்பாதவன் போகட்டும் .என் தேர் ஓடிகொண்டே இருக்குமடா மகனே!”.-அன்னையின் அருள்மொழி

4 thoughts on “சக்திமாலை – இருமுடியும், சக்திவிரதமும்: மேல்மருவத்தூர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.